Sunday, December 24, 2023

திருப்பாவை பாசுரம் 4

< Previous                            All                                Next >

திருப்பாவை  தனியன்கள் 

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
     உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
     ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
     யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
     பூய ஏவாஸ்து பூய :

              (பராசர பட்டர் அருளியது)

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

                    (உய்யக்கொண்டார் அருளியது)

திருப்பாவை பாசுரம் 4

ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
     ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
     பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
     தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
     மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

ஆண்டாள் திருவடிகளே சரணம் !!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் !!

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

< Previous                            All                                Next >

No comments:

Post a Comment