Sunday, December 24, 2023

திருப்பாவை பாசுரம் 13

< Previous                            All                                Next >

திருப்பாவை  தனியன்கள் 

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
     உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
     ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
     யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
     பூய ஏவாஸ்து பூய :

              (பராசர பட்டர் அருளியது)

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

                    (உய்யக்கொண்டார் அருளியது)

திருப்பாவை பாசுரம் 13

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

ஆண்டாள் திருவடிகளே சரணம் !!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் !!

பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்: கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

< Previous                            All                                Next >

No comments:

Post a Comment