Sunday, December 24, 2023

திருப்பாவை பாசுரம் 28

< Previous                            All                                Next >

திருப்பாவை  தனியன்கள் 

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
     உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
     ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
     யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
     பூய ஏவாஸ்து பூய :

              (பராசர பட்டர் அருளியது)

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

                    (உய்யக்கொண்டார் அருளியது)

திருப்பாவை பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
     அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
     குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
     இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்

ஆண்டாள் திருவடிகளே சரணம் !!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் !!

பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

விளக்கம்: “குறையொன்றுமில்லாத கோவிந்தா” என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ்ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட்டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்து ஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

< Previous                            All                                Next >

No comments:

Post a Comment