Sunday, December 24, 2023

திருப்பாவை பாசுரம் 25

< Previous                            All                                Next >

திருப்பாவை  தனியன்கள் 

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
     உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
     ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
     யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
     பூய ஏவாஸ்து பூய :

              (பராசர பட்டர் அருளியது)

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

                    (உய்யக்கொண்டார் அருளியது)

திருப்பாவை பாசுரம் 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
     அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

ஆண்டாள் திருவடிகளே சரணம் !!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் !!

பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்: பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்?” என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் “தூண்” என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

< Previous                            All                                Next >

No comments:

Post a Comment