Saturday, December 23, 2023

திருப்பாவை பாசுரம் 1

< Previous                            All                                Next >

திருப்பாவை  தனியன்கள் 

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
     உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
     ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
     யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
     பூய ஏவாஸ்து பூய :

              (பராசர பட்டர் அருளியது)

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

                    (உய்யக்கொண்டார் அருளியது)

திருப்பாவை பாசுரம் 1


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம் !!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் !!


பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான்” என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

< Previous                            All                                Next >

No comments:

Post a Comment