Sunday, December 24, 2023

திருப்பாவை பாசுரம் 18

< Previous                            All                                Next >

திருப்பாவை  தனியன்கள் 

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
     உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
     ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
     யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
     பூய ஏவாஸ்து பூய :

              (பராசர பட்டர் அருளியது)

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

                    (உய்யக்கொண்டார் அருளியது)

திருப்பாவை பாசுரம் 18

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
     நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
     வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
     பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
     வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

ஆண்டாள் திருவடிகளே சரணம் !!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் !!

பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம்” என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால், அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

< Previous                            All                                Next >

No comments:

Post a Comment